Tuesday, August 31, 2010

panaikulam syed mohamed waliyullahஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!!  நமது இஸ்லாம் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.பனைக்குளம் செய்யிது முஹம்மது 
வலியுல்லாஹ் (ரஹ்)

மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ் அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் மலிகுல் உலமா குத்புஜ் ஜமான் மஸீஹுல் அனாம் மௌலான ஷைகுனா

பாவா என்று அன்புப் பெயரால் அழைக்கப்பெற்ற இவர்களின் இயற்பெயர் செய்யிது முஹம்மது என்பதாகும். இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் (இந்தியா, தமிழ் நாடு) கி.பி.1882ல் பிறந்தனர். இவர்களின் தந்தை பெயர் சீனித்தம்பி. தாயார் பெயர் ஆமினா. தந்தையார் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

கி.பி.1892ல் இவர்கள் பத்து வயது சிறுவராக இருக்கும் இவர்களை இவர்களின் உறவினர் முஹம்மது அலீ என்பவர் தம்முடன் மலேயாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்துத்தான இவர்கள் திருக்குர்ஆன் ஓதக் கற்றுக்கொண்டனர். கி.பி.1897ல் தாயகம் திரும்பிய இவர்கள் மீண்டும் மலேயா சென்றனர். வாணிபத்தின் பொருட்டு அங்குசென்ற இவர்கள் எப்பொழுது பார்த்தாலும் தியானத்திலும், தொழுகையிலும், குர்ஆனை ஒதுவதிலும் ஈடுபட்டிருப்பதைக் கண்ட இவர்களின் உறவினர் முஹம்மது அலீ இவர்களை நோக்கி தாங்கள் என்ன பெரிய ஆலிமாகி விட்டீர்களா? எப்பொழுது பார்த்தாலும் தொழுகையிலும் வணக்கத்திலும் ஈடுபட்டிருந்தால் தங்களின் வருங்காலம் என்னாவது? என்று சற்றுக் கடுமையாகக் கூறினார். இது இவர்களின் உள்ளத்தில் தைத்தது. கி.பி.1901ம் ஆண்டு இவர்கள் தாயகம் திரும்பும் சமயம் அவர் நலமாக ஊர் சென்று திருமண முடித்து சிலகாலம் வாழ்ந்துவிட்டு விரைவில் வந்து விடுங்கள் என்று கூறி அனுப்பியபொழுது மச்சான் நான் இங்கு மீண்டும் வரமாட்டேன். என்னைத் தாங்கள் மீண்டும் பார்க்கும் பொழுது ஓர் ஆலிமாகவே பார்ப்பீர்கள் என்று கூறிவிட்டு இவர்கள் கப்பலேறினர்.

தாயகம் திரும்பிய இவர்கள்  தம் எண்ணத்தைப் பெற்றோர்களிடம் கூற அதற்கு அவர்கள் இசையவில்லை. எனவே ஓரிரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நான் அரபிக் கல்வி பயிலப் புறப்பட்டு விட்டேன் என்று ஒரு தாளில் எழுதி தம் சகோதரர் ஹபீப் முஹம்மதின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு முதுகுளத்தூர் வந்து அங்குள்ள மதரஸாவில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் பயின்றனர். பின்னர் வேலூர் சென்று மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் அஃலா ஹழரத் அப்துல் வஹாப் சாஹிப் அவர்களிடம் கல்வி பயின்றனர். பின்னர் பொன்னானி சென்று அங்குள்ள மத்ரஸாவில் எட்டு ஆண்டுகள் பயின்றனர். அப்பொழுது இவர்களின் ;இலக்கணத் திறமையைக் கண்ட ஆசிரியர்கள் இவர்களுக்கு நஹ்வீன் (இலக்கண வல்லுனர்) என்ற பட்டத்தை வழங்கினர். பின்னர் சென்னை சென்று அங்குள்ள ஜமாலியாவிலும் பின்னர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்திலும் கல்வி பயின்று பட்டம் பெற்றனர். இவ்வாறு பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தன.

கி.பி.1923ல் இவர்கள் ஜுலைகா பீவி என்னும் மங்கை நல்லாரை மணமுடித்து வாழ்ந்தனர். அவர்கள் மறைவிற்குப் பின் கி.பி.1949ல் ஆமினா பீவி என்ற மங்கை நல்லாரை மணமுடித்து வாழ்ந்தனர். இவர்களின் இல்லமோ களிமண்ணால் கட்டப்பட்ட சிறிய வீடுதான் . வீட்டின் மேற்கூறை தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருந்தது. நாற்புறமும் ஓலையினால் வேலி அடைக்கப்பட்டிருந்தது. இத்தகு எளிய இல்லத்தில் தான் இவர்கள் இறுதிவரை வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இவர்களின் இல்லம் வந்த இவர்களின் தோழர் பீர் முஹம்மது என்பவர் இவர்களை நோக்கி இந்த வீட்டை நன்முறையில் கட்டித்தர எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வினயமாக வேண்டி நிற்க இவர்களின் கண்கள் சிவந்தன. பீர் முஹம்மது வந்த அலுவலை முடித்துக் கொண்டு செல்லுங்கள். இந்த எண்ணம் உங்களுக்கு வேண்டாம் என்று சற்றுக் கடுமையாக கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

எப்பொழுதும் கையில் தஸ்பீஹுடன் காட்சி வழங்கும் இவர்கள் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் நோன்பு நோற்று வந்தனர் . எனினும் அதனை இவர்கள் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

இவர்களின் உணவோ மிகவும் எளிமையானது. அதனை உண்ணும் முன் இவர்கள் பதினோரு தடவை ஸலவாத்தை ஓதிக்கொள்வார்கள். பின்னர் பிஸ்மி சொல்லி முதலில் உப்பை எடுத்து நாவில் வைத்து அதன்பின் சில பச்சை வெங்காயங்களை சாப்பிடுவர். அதன்பின் வெறும் சோறை மட்டும் மூன்று பிடி எடுத்து அருந்துவிட்டு பின்னர் ஆணம்,கறி ஆகியவற்றுடன் உணவருந்துவர். உணவருந்திய பின் பீங்கானை கழுவிக் குடிப்பார்கள்.

இரவில் இவர்கள் உறங்குவது சிறிது நேரம்தான். ஒரு மரக்கட்டையை தலையனையாக வைத்துக்கொண்டுதான் இவர்கள் உறங்குவது வழக்கம்.

பெரும்பாலும் பகலில் தம் நேரத்தைப் பள்ளிவாயிலில் கழிக்கும் இவர்கள் இரவில் காடுகளுக்குச் சென்று தவம் செய்து விட்டுத் திரும்புவர்.

எப்பொழுதும் ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்பதற்காக இவர்கள் வெளியே எங்கு சென்றாலும் தம்முடன் ஒருசிலரை அழைத்துச் செல்வர். பிரயாணம் புறப்படும் பொழுது பள்ளிவாயிலில் இருந்து புறப்படுவர். ஊர் திரும்பும் பொழுது முதலில் பள்ளிவாயிலிலேயே வந்து இறங்குவர்.

ஷாதுலியா தரீக்காவைப் பின்பற்றிய இவர்கள் கி.பி.1932ம் ஆண்டில் தம் ஊர் பள்ளிவாயிலில் ஹல்கா திக்ரை துவக்கி வைத்து ஒவ்வொரு நாளும் வைகரைத் தொழுகைக்குப் பின்பும் மஃரிப் தொழுகைக்குப் பின்பும் வழக்கமாக செய்து வந்தனர். கி.பி.1936ல் இவர்கள் தம் ஊரில் ஒரு மத்ரஸாவை ஏற்படுத்தி மாணவர்கள் மார்க்கக் கல்வி பயின்று சென்றனர்.

இவர்களின் கல்வி ஞானத்தை சோதித்துப் பார்க்க விரும்பிய சிலர் இவர்களிடம் குர்ஆனின் ஒரு சிறு வசனத்திற்கு விளக்கம் வேண்டிய பொழுது ஒரு பகல் ஒரு இரவு அதற்கு விளக்கம் பகர்ந்து கேட்டவர்களை வியப்புக் கடலில் ஆழ்த்தினர்.

கல்வி ஞானத்தில் மட்டுமல்லாது ஆன்மீக ஞானத்திலும் இவர்கள் மிகவும் உயரிய படித்தரத்தில் இருந்தனர். அதன் காரணமாக இவர்கள் ஆற்றிய அற்புதங்கள் பல. எவருடைய உள்ளத்திலும் உள்ளதை அறியும் இயல்பு இவர்களிடம் இருந்தது. எனவே வந்தவர் தாம் கூற வந்ததைக் கூறுமுன் இவர்கள் அதற்குப் பதில் கூறிவிடுவார்கள். பேரீத்தம் பழத்தையோ அல்லது நாம் அன்றாட உண்ணும் உணவுப் பொருளையோ ஓதிக் கொடுத்து தீராத வியாதிகளையெல்லாம் குணப்படுத்துவர். கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென வாய் பேச முடியாத, கண் பார்க்க முடியாத, காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. டாக்கடர்கள் எவ்வளவோ முயன்றும் அவருக்குப் பலன் நல்க இயலவில்லை. ஆனால் இவர்களோ அவரை ஒரு சாதாரண உணவை உண்ணுமாறு செய்தார்கள். அவர் பூரண நலன் பெற்று எழுந்தார்.

மழை இல்லாத காலத்தில் மக்கள் இவர்களிடம் வந்து முறையிடும் பொழுது இவர்கள் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி தம் வீட்டு முற்ற வெளியில் நின்று குளிப்பார்கள். குளித்துவிட்டு தின்னையில் ஏறியவுடன் மழை பெய்யத் துவங்கிவிடும். இவ்வாறு பல தடவை நிகழ்துள்ளது.

இவர்கள் தம்மைக் காண வருபவர்களிடம் எல்லாம் கூறிய அறிவுரை அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி என்ற ஸலவாத்தை காலையிலும் மாலையிலும் ஆயிரம் தடவைகள் ஓதிவரின் எல்லா நன்மைகளையும் எய்தப் பெறுவீர்கள். இவ்விதம் செய்வது மானிடனின் கடன் என்று இவர்கள் கூறுவார்கள்.

மார்க்கம் பற்றிய வரையில் மிகவும் கண்டிப்புக்காரராக இருந்த இவர்கள் 95 வயது நிரம்பிய இவர்களின் தந்தை அமர்ந்து தொழுவதற்கு இவர்களிடம் அனுமதி வேண்டிய பொழுது ஒருவர் ஐந்து ரூபாயை தங்களிடம் தந்து ஒரு வேலையை முடித்துத் தருமாறு கூறினால் என்ன செய்வீர்கள்? என்று வினவினர். முடித்துத்தான் கொடுப்பேன். அதுதானே என்னுடைய வேலை என்று பதில் கூறினார் தந்தை. அப்படியானால் தாங்கள் நின்றுதான் தொழ வேண்டும். உட்கார்ந்து தொழக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

இவர்கள் தம் மகன் மவ்லவி முஹம்மது முபாறக்குடன் ஒருமுறை ஹஜ்ஜுச் செய்து வந்தனர். அப்பொழுது நடந்த அற்புதங்கள் பல. ஹஜ்ஜுச் செய்துவிட்டு தாயகம் திரும்ப நாடி ஜித்தா விமான நிலையத்தில் வந்து காத்திருந்த பொழுது நீண்ட உருவினர் ஒருவர் வந்து இவர்களுக்கு ஸலாம் உரைத்துத் தம் கைத்துண்டில் முடிந்து வைத்திருந்த இரண்டு குர்ஸ் நாணயங்களை அவிழ்த்து இவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அவர் சென்ற பின் இவர்கள் தாம் ஆதம் (அலை) என்று தம் மகனிடம் கூறினார்கள். அந்த இரண்டு குர்ஸ் நாணயங்களையும் இவர்கள் எப்பொழுதும் கைக்குட்டையில் முடிந்து வைத்திருப்பர். அவை இப்பொழுது இவர்களின் மகன் மவ்லவி முஹம்மது முபாறக்கிடம் உள்ளது.

இவர்கள் கி.பி.1968 ஜனவரி 23ம் நாள் செவ்வாய் கிழமை பின்னேரம் புதன் இரவு ஏழேகால் மணியளவில் பனைக்குளத்தில் காலமாயினர். இவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று மக்களிடம் பிரச்சனை எழ இறுதியாக திருவுலச் சீட்டுக் குலுக்கி எடுக்கப்பட்டதில் பள்ளிவாசலில் என்றிருந்ததால் பள்ளிவாசலின் தென்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஷவ்வால் பிறை 23ல் இவர்களின் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.

இரண்டு மனைவியர் மூலம் இவர்களுக்குப் பிறந்த ஆண் மக்களான முஹம்மது அப்துர் ரஷீது, முஹம்மது குத்புத்தீன், முஹம்மது முபாறக் , முஹம்மது இம்தாதுல்லாஹ்,முஹம்மது ஹஸன் வதூது பில்லாஹ், முஹம்மது ஹிம்யானுல்லாஹ் ஆகிய அனைவரும் ஆலிம்களாக உள்ளனர். பெண்மக்களில் நால்வரில் மூவர் இப்பொழுது வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் துவங்கிய ஹல்கா திக்ர் பள்ளிவாயிலில் இவர்களின் மக்களால் இப்பொழுதும் நடத்தப்பட்டு வருகிறது.

நன்றி : இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் மூன்றாம் பாகம்.


செய்யது முஹம்மது வலியுல்லாஹ் நினைவிடம்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மானிலத் தலைவரும் அகில இந்திய செயளாலருமான பேராசிரியர் காதர் முஹ்யித்தீன் அவர்கள் மஹான் பாபா அவர்களின் நினைவு நாள் விழாவில் உரையாற்றுகிறார்கள்
தினத் தந்தி நாளிதழில் மஹான் பாபா அவர்களின் சிறப்புகளையும் அழகங்குளம் வருசை முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின்
சிறப்புகளையும் பற்றி வெளியான செய்தி